ஆவடியில் வரி செலுத்தாத தனியார் வணிக நிறுவனத்துக்கு சீல்!

சொத்து வரி, வணிக உரிமக் கட்டணம், தொழில் வரி செலுத்தாததால் மாநகராட்சி நடவடிக்கை

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நீண்ட நாட்களாக மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தாமல் இருந்த தனியார் வணிக நிறுவனத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி மாநகராட்சியின் சி.டி.எச். மெயின் ரோடு, ஆதித்தனார் தெரு பகுதியில் இயங்கி வந்த தனியார் வணிக நிறுவனம், மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வணிக உரிமக் கட்டணம் மற்றும் தொழில் வரி ஆகியவற்றை நீண்ட நாட்களாகச் செலுத்தாமல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆவடி மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்பேரில், மாநகராட்சி துணை ஆணையர் டிட்டோ முன்னிலையில், மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது சொத்து வரி, வணிக உரிமக் கட்டணம் மற்றும் தொழில் வரி ஆகியவற்றை முறையாகச் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தத் தவறி விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply