சாலையில் தொங்கும் மின்கம்பி..! வாணியம்பாடியில் விபத்து அபாயம்!
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு செல்லும் சாலையில், மின் கம்பத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் தாழ்வாகவும், அபாயகரமான நிலையிலும் தொங்கிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கு செல்லும் இந்த சாலை குறுகியதாகவும், நாள் முழுவதும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட ஏராளமானோர் தினமும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மின் கம்பத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் ஒயர் சாலையை ஒட்டியவாறு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களுக்கு மின்சார விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரும், மின்சாரத்துறை அதிகாரிகளும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சாலையில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியை பாதுகாப்பான முறையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் மின்கம்பி ஆபத்தான நிலையில் இருப்பதால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக வெற்றிக்குரல்