பழங்குடியினர் நல இயக்குநரகத்தில் புதிய பதிவு! FPO, FPC அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!

2026–2027ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியீடு – பழங்குடியின விவசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்க முன்னுரிமை

சென்னை, அக்டோபர் 22:

தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நல இயக்குநரகம் சார்பில், 2026–2027ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி, சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களில் பழங்குடியின விவசாயிகளுக்காக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO/FPC) உருவாக்கி, பதிவு செய்து, வலுப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள முதன்மை அமைப்புகள், நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் தனிநபர் வல்லுநர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

யார் விண்ணப்பிக்கலாம்?

வகை 1 – தனிநபர் ஆலோசகர்: விண்ணப்பதாரர் நிறுவனச் செயலர், பட்டயக் கணக்காளர் அல்லது வேளாண் வணிக வல்லுநராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று FPO/FPC அமைப்புகளை உருவாக்கி, பதிவு செய்து, அவை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட உதவிய அனுபவம் அவசியம்.

வகை 2 – நிறுவனம் அல்லது அமைப்பு: நிறுவனம், முதன்மை அமைப்பு, அரசுசாரா நிறுவனம் அல்லது தனிநபர் நிறுவனம் ஆகியவை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் மூன்று FPO/FPC அமைப்புகளை உருவாக்கி, பதிவு செய்து, அவற்றை மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்படுத்திய அனுபவம் இருக்க வேண்டும்.

வகை 3 – ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட FPO/FPC: விண்ணப்பதாரர் அமைப்பு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். மேலும், ஏற்றுமதி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் மின்னணு வணிகம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வருவாயை அதிகரித்ததற்கான சான்றுகளுடன் கூடிய வெற்றிகரமான வணிகச் செயல்பாட்டுப் பதிவு இருக்க வேண்டும்.

பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை

பழங்குடியின விவசாயிகள் அல்லது இயக்குநர் குழு உறுப்பினர்களில் குறைந்தது 50 சதவீதம் பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக உள்ள வகை 2 மற்றும் வகை 3 விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதி, அனுபவம், சாதனைகள் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அச்சுப் பிரதியை உறையில் இட்டு, “இயக்குநர், பழங்குடியினர் நல இயக்குநரகம், எழிலகம், சென்னை – 05” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும், விண்ணப்பத்தின் மென்பிரதியை tntribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 05.11.2026 மாலை 5.30 மணி.

தகுதியுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு பழங்குடியினர் நல இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply