“தோல்வி என்பது முயற்சியை நிறுத்துவதுதான்”..! ஆசிரியர் தின விழாவில் முதல்வர் அறிவுரை.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) சாந்தி தலைமை வகித்து மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், மாணவிகள் தங்கள் வாழ்வில் ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் விரைவாக முன்னேற முடியும் என்றும், மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்காமல் பாடங்களைப் புரிந்து படித்தால் வெற்றியை எளிதில் அடையலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஆசிரியரை மதிப்பது என்பது அவர் முன் எழுந்து நிற்பது மட்டுமல்ல என்றும், ஆசிரியர் கூறும் நல்ல கருத்துகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே உண்மையான மரியாதை என்றும் அவர் கூறினார்.
மாணவிகள் எப்போதும் கேள்வி கேட்க தயக்கம் காட்டக்கூடாது என்றும், “சந்தேகம் தான் அறிவின் தொடக்கம்” என்றும் குறிப்பிட்டார். ஒரு முறை தோல்வியடைந்தால் அது தோல்வி அல்ல என்றும், முயற்சியை கைவிடும்போதுதான் உண்மையான தோல்வி ஏற்படுகிறது என்றும் அறிவுறுத்தினார்.
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் மதிக்க வேண்டும் என்றும், பெரிய பதவியை விட நல்ல குணம்தான் ஒருவரை உயர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், “ஆசிரியர் என்பவர் விளக்கு அல்ல; அவர் ஒரு வழிகாட்டி. விளக்கு வெளிச்சத்தை மட்டும் காட்டும்; வழிகாட்டி வாழ்க்கையை காட்டுவார்” என்று மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.
இதைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேரவை பொறுப்பாசிரியர் வள்ளிசித்ரா செய்திருந்தார்.
விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று ஆசிரியர் தின விழாவை சிறப்பித்தனர்.
தமிழக வெற்றிக்குரல்