வீடின்றி தவிக்கும் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்..! இலவச வீட்டுமனை கோரி மனு.

கிருஷ்ணகிரி:

காவேரிப்பட்டணம் வி.எஸ்.கே. நகரைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி, வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மனுவில், தாங்கள் போயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமாக வசிக்க வீடுகள் இல்லாததால், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக கூறியுள்ளனர்.

மேலும், வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், கூலி வேலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாடகை செலுத்தி வசிப்பது சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் சில குடும்பங்கள் போதிய இடவசதியின்றி கூட்டுக் குடும்பமாக வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தங்களுக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்து, அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply