ரூ.6,000 உதவித்தொகை கோரி போராட்டம்..! கிருஷ்ணகிரியில் 75 பேர் கைது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெயராமன் கோரிக்கைகள் குறித்து பேசினார். துணைத் தலைவர் கோட்டீஸ்வரன் நன்றி கூறினார்.
போராட்டத்தில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உதவித்தொகை வழங்கப்படுவதாகவும், தமிழகத்தில் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை மட்டுமே வழங்கப்படுவதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த தொகை மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
எனவே, பிற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போல தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், உதவித்தொகை கோரி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 75 மாற்றுத்திறனாளிகளை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக்குரல்