கைது செய்யும் முன் இதை செய்யணும்..! போலீசாருக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.
சென்னை:
குற்ற வழக்குகளில் ஒருவரை கைது செய்யும்போது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் கைது செய்வதற்கான காரணங்களை தெளிவாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி., அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மற்றும் கோவையில் செயல்பட்டு வந்த ஃபிட்ஜி (FIITJEE) தனியார் கல்வி பயிற்சி மையங்கள் கடந்த ஆண்டு மூடப்பட்டன. மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் முன்வைப்புத் தொகையை திருப்பி வழங்கவில்லை என 533 பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், ரூ.10.63 கோடி மோசடி செய்ததாக கூறி, அந்த நிறுவனத்தின் தமிழக நிர்வாக பங்குதாரரான அங்குர் குமார் ஜெயின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட அங்குர் குமார் ஜெயின், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி என்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், அவர் மாற்றுத்திறனாளி என்றும், செயற்கை கால் சேதமடைந்துள்ளதால் சிறையில் நடமாடுவதில் சிரமம் இருப்பதாகவும், போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுவிட்டதாகவும் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருவரை கைது செய்யும்போது குற்றச்சாட்டுகள், அதற்கான முகாந்திரம் மற்றும் கைது செய்வதற்கான காரணங்கள் ஆகியவை புலனாய்வு அதிகாரியால் தெளிவாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், அந்த காரணங்கள் கைது செய்யப்படும் நபருக்கு புரியும் மொழியில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவத்தில் பெயரளவுக்கு விவரங்களை நிரப்பி, கைது காரணங்களை இயந்திரத்தனமாக தெரிவிக்கும் நடைமுறை இருக்கக்கூடாது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். கைது காரணங்கள் அடங்கிய ஆவணம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பாக கைது செய்யப்படும் நபரிடம் வழங்கப்பட வேண்டும் என்றும், கைது குறித்த தகவல் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கைது நடைமுறையில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய வழிமுறைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் டி.ஜி.பி. சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதற்கான அறிக்கையை நவம்பர் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைது காரணங்களை சட்டரீதியாக முறையாக தெரிவிக்காதது உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, அங்குர் குமார் ஜெயினுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
தமிழக வெற்றிக்குரல்