பட்டா முதல் யானை தாக்குதல் நிவாரணம் வரை..! தேன்கனிக்கோட்டையில் விவசாயிகள் போராட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அரசியல் கட்சி சாரா தமிழக விவசாயிகள் சங்கம் (நாராயணசாமி நாயுடு, சிவசாமி வழிவந்த இயக்கம்) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாநிலத் துணைச் செயலாளர் கோணப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சீனிவாசன், குள்ளப்ப நாயுடு, ராஜ் சிவ கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் ஜே.பி. முருகன் வரவேற்புரையாற்றினார்.

போராட்டத்தில் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

2007-ல் வழங்கிய பட்டாக்களை பதிவேற்றக் கோரிக்கை

கடந்த 2007-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலப் பட்டாக்களை இதுவரை கிராம மற்றும் வட்டக் கணக்குகளில் பதிவேற்றம் செய்யாமல் காலதாமதம் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். அந்தப் பட்டாக்களை உடனடியாக அரசு பதிவுகளில் பதிவேற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டு தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் UDR திருத்தம் தொடர்பான மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

யானை தாக்குதலில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம்

வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

யானை தாக்குதலில் உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

பட்டா மாற்றத்தில் முறையான விசாரணை தேவை

கிராம புல எண்களில் வில்லங்கம் அல்லது ஆட்சேபனை இருப்பதாக விவசாயிகள் மனு அளிக்கும் நிலையில், அதனை முறையாக விசாரிக்காமல் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு செய்யாமல் அலுவலகத்தில் இருந்தபடியே உயர் அதிகாரிகளுக்கு அறிக்கைகள் அனுப்புவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

எனவே, விவசாயிகளின் நிலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

வட்டாட்சியரிடம் மனு

போராட்டத்தின் முடிவில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வட்டாட்சியரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

நிர்வாகிகள் நாகராஜ், நாராயணப்பா, தாசப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகளின் உறுதியை ஏற்று விவசாயிகள் தங்களது காத்திருப்புப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தமிழகத்தில் விவசாயிகளின் நில உரிமை மற்றும் வனவிலங்கு தாக்குதல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து பேசுபொருளாக உள்ள நிலையில், தேன்கனிக்கோட்டை விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply