தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து புறப்பட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

சென்னை:

தமிழ்நாட்டுக்கு அதிகளவில் தொழில் முதலீடுகளை ஈர்த்து, மாநிலத்தை முதலீட்டுக்கு உகந்த முன்னணி மாநிலமாக உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையிலான குழு இன்று (10.09.2026) சென்னையிலிருந்து புறப்பட்டு, வரும் 17.09.2026 அன்று சென்னை திரும்புகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களுக்குள் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு ஜப்பானிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் ரூ.8,491 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன், இதன்மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டுச் சந்தையில் தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த 15.07.2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா–பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தமான CETA, இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. CETA ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே சென்னையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அனுமதி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்திய முதல் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.

பிரிட்டன் சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு உற்பத்தித் துறைகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அரசின் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகள் பிரிட்டன் சந்தையில் அதிகரித்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பான நிலையில் உள்ளன.

மேலும், கூட்டு நிறுவனப் பங்குதாரர்களைப் பெறுவதற்கும், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் CETA ஒப்பந்தம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொருளியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் குறிப்பிட்ட அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது தலைமை அலுவலகங்களையும், உலகளாவிய திறன் மையங்களையும் (GCCs) நிறுவி வருகின்றன. ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இந்தப் பயணம் முக்கிய வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ (Motor Sports City) அமைக்கப்படும் என முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, புதுப்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ முதலமைச்சர் தலைமையிலான குழு பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இதனை வளர்ச்சி மற்றும் வணிக ரீதியாக செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள முடியும். மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்துகொள்ள முடியும்.

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையிலான குழு இன்று (10.09.2026) சென்னையிலிருந்து புறப்பட்டு, 17.09.2026 அன்று சென்னை திரும்புகிறது. இந்தக் குழுவில் மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அஞ்சனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலர் திரு. மேகநாத் ரெட்டி, இ.ஆ.ப., தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance) மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெறுகின்றனர்.

Leave a Reply