ஒசூரில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு: தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் கடும் அவதி.
ஒசூர்:
ஒசூரில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழில் துறையினர் மட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒசூரில் 150-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக முதல் சிப்காட் மற்றும் இரண்டாவது சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழில் நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், ஒசூர்–பாகலூர் சாலையில் கே.சி.சி. நகர் பகுதியில் அமைந்துள்ள குறிஞ்சி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியிலும் தினமும் சுமார் மூன்று மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சில நாள்களில் காலை நேரத்திலும், சில நாள்களில் பிற்பகல் நேரத்திலும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மாலை நேரங்களில் மின்தடை ஏற்படும்போது பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பது உள்ளிட்ட அன்றாட வீட்டு வேலைகளை மேற்கொள்வதில் பெண்கள் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, மாதம் ஒருமுறை பராமரிப்புப் பணிகளுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற திட்டமிட்ட பராமரிப்பு மின்தடைகளுக்கு இடையிலும், நாள்தோறும் கூடுதலாக இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியான மின்தடை காரணமாக அன்றாட பணிகள் மட்டுமின்றி சிறு, குறு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் உற்பத்தி மற்றும் தொழில் நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, குறிஞ்சி நகர் எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்தடைக்கு நிரந்தரத் தீர்வு காண மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்தடைக்கான காரணத்தை ஆய்வு செய்து, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக வெற்றிக்குரல்