ஒசூரில் சிறப்பு வாகனத் தணிக்கை: 4 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3.18 லட்சம் அபராதம்.

ஒசூர்:

ஒசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 4 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வரி செலுத்தாமல் மற்றும் அதிக பாரம் ஏற்றி இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் சம்பத்குமார் உத்தரவின்பேரில், ஒசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கை நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் (நிலை-1) விஜயகுமார், சுமதி, அன்பு மற்றும் ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.

தணிக்கையின்போது, உரிய வரி செலுத்தாமலும், தேவையான ஆவணங்கள் இன்றியும் இயக்கப்பட்ட 4 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, அந்த பேருந்துகளுக்கு வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.3.18 லட்சம் வசூலிக்கப்பட்டது.

மேலும், வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதுடன், அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு மேக்ஸி கேப் என மொத்தம் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஒசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு எதிராக தொடர்ந்து சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply