ஒசூர் அருகே மெத்தம்பெட்டமைன் கடத்தல்: நைஜீரிய மாணவர், ஐடி ஊழியர் கைது.
ஒசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் சொகுசுப் பேருந்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில், நைஜீரியாவைச் சேர்ந்த மருத்துவ இமேஜிங் மாணவர் மற்றும் கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் என இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 150 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூசூவாடி சோதனைச்சாவடியில் கடந்த ஜூலை 31ஆம் தேதி போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் சொகுசுப் பேருந்தை சோதனையிட்டபோது, சுமார் 150 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி அருகே இடைக்கொச்சி பகுதியைச் சேர்ந்த கிளைவார்ட் சேவியர் அந்தோணி (23) என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அட்கோ காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீஸார் பெங்களூருவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், போதைப்பொருள் கடத்தலில் முக்கியப் புள்ளிகளாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை புதன்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நைஜீரியாவைச் சேர்ந்த ஓஃபுஎவானி (22). இவர் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. மருத்துவ இமேஜிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பெங்களூரு சிதாபுரா பகுதியில் உள்ள ஹைலேண்ட் கிரீன்டேல் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த அவர், போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
மற்றொருவர் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த ஜோசன் சாலமன் (23). இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரிடமிருந்தும் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 150 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் ஒசூர் சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்