பட்டிமன்ற உலகின் மகுடம் சாலமன் பாப்பையா காலமானார் – தமிழ் உலகம் சோகம்.
மதுரை:
பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் காலமானார். மதுரையில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிலும், பட்டிமன்ற ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5-ம் தேதி சிவகாசியில் நடைபெற்ற சன் டிவியின் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்று நிகழ்ச்சியை நடத்தினார். அதன்பின்னர் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருந்து வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக பட்டிமன்ற மேடையில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் சாலமன் பாப்பையா. நகைச்சுவை, எளிமையான பேச்சு, ஆழமான தமிழ் அறிவு மற்றும் சமூகப் பார்வை ஆகியவற்றை ஒருங்கிணைத்து பட்டிமன்றங்களை நடத்தி, அவற்றை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றார். பல்லாயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்திய அவர், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
“அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, இனிய குழந்தைகளே” என்ற அவரது கணீர்க் குரல் தமிழர்களின் இல்லங்களில் பரிச்சயமான ஒன்றாக மாறியது. குறிப்பாக பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்கள் மூலம் பல தலைமுறையினரிடமும் அவர் தனி வரவேற்பைப் பெற்றிருந்தார்.
புராணங்கள் மற்றும் இலக்கியங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்ற விவாதங்களை மாற்றி, குடும்ப உறவுகள், மதுப்பழக்கம், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய விஷயங்களையும் விவாதப் பொருளாக மாற்றியதில் சாலமன் பாப்பையாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பட்டிமன்றங்களை சாதாரண மக்களின் வாழ்க்கையோடு நெருக்கமாகக் கொண்டு சென்றார்.
தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றிய சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியத்தை எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து பங்காற்றினார். அவரது பேச்சு மற்றும் தமிழ் சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
தமிழ் மொழி, இலக்கியம், பட்டிமன்றம் மற்றும் சமூக சிந்தனை ஆகிய துறைகளில் பல தலைமுறைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்திய சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது குரலும், பட்டிமன்ற நடுவராக அவர் உருவாக்கிய தனித்துவமான பாணியும் தமிழ் ரசிகர்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.
தமிழக வெற்றிக்குரல்