“எந்த தேர்தல் வந்தாலும் தவெகவே வெற்றி!” – அமைச்சர் காந்திராஜ் அதிரடி பேட்டி.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள கூட்டுறவு சங்க வங்கி மற்றும் கிடங்கில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இனி எந்த தேர்தல் நடைபெற்றாலும் தமிழக வெற்றிக் கழகமே வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

திருநின்றவூரில் உள்ள கூட்டுறவு சங்க வங்கிக்கு சென்ற அமைச்சர் காந்திராஜ், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், கணக்கு வழக்குகள் மற்றும் வரவு-செலவு விவரங்களை நேரில் ஆய்வு செய்தார். கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க கிடங்கிற்குச் சென்ற அமைச்சர், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், விவசாயக் கடன் மற்றும் கூட்டுறவுக் கடன் தொடர்பான கணக்குகள் குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் காந்திராஜ் சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கடன் வழங்கல், கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்திராஜ், தமிழக அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ள நிலையில், கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மீண்டும் புதிதாக கடன் பெற்றுள்ளார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

பொது விநியோகத் திட்டத்தைப் பொறுத்தவரை, பொதுமக்களுக்கு எந்தவித இடர்பாடும் ஏற்படாத வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அப்போது தமிழக அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் காந்திராஜ், இடைத்தேர்தல் மட்டுமல்லாமல், இனி தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் தமிழக வெற்றிக் கழகமே வெற்றி பெறும் என தெரிவித்தார். அமைச்சரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கூட்டுறவு வங்கி மற்றும் கிடங்கில் நடைபெற்ற ஆய்வைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்ந்த பணிகள் மற்றும் விவசாயிகளுக்கான கடன் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply