பட்டாபிராம் அருகே கோர விபத்து – லாரியில் சிக்கிய ஓட்டுநர் உயிரிழப்பு.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியில் சென்னை வெளிவட்டச் சாலையில் இன்று (செப்டம்பர் 12) அதிகாலை கடும் விபத்து ஏற்பட்டது. பழுதாகி சாலையோரத்தில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி மோதியதில், டாரஸ் லாரி ஓட்டுநர் முத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பூவிருந்தவல்லியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, பட்டாபிராம் நெமிலிச்சேரி அருகே பழுதாகி சாலையில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த ஜல்லி ஏற்றிய டாரஸ் லாரி வேகமாக வந்து கண்டெய்னர் லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
மோதலின் வேகத்தில் டாரஸ் லாரியின் முன்பகுதி கடுமையாக நசுங்கியது. இதில் ஓட்டுநர் முத்து லாரிக்குள் சிக்கிக் கொண்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்க போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு முத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, லாரியில் சிக்கியிருந்த முத்துவின் உடலை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக பூவிருந்தவல்லி–நெமிலிச்சேரி இடையேயான சென்னை வெளிவட்டச் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்