கேரளம் : பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது திடீரென பாய்ந்த கார்! ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்!

திருச்சூர்: கேரள மாநிலம் வாணியம்பாறையில் பேருந்துக்காக சாலையோரம் காத்திருந்தவர்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர்.

வடக்கஞ்சேரி–மண்ணுத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாணியம்பாறை பகுதியில் இன்று காலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது.

பேருந்துக்காக காத்திருந்த நான்கு பேர் மீது கார் திடீரென மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாணியம்பாறை பொட்டிமடா பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மனைவி ஷகீலா மற்றும் வாணியம்பாறையைச் சேர்ந்த பிரதீப், மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் விபத்தில் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வடக்கஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

காரை திருச்சூர் பகுதியைச் சேர்ந்த அமல் (22) என்பவர் ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை வடக்கஞ்சேரி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கான காரணம், காரின் வேகம் உள்ளிட்டவை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply