ரூ.30க்கு மின்சாரம் வாங்க கேரள அரசு முடிவு! மின் நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை!
திருவனந்தபுரம்:
கேரளாவில் நிலவி வரும் மின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனை (NTPC) அணுக கேரள மின்சார வாரியத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக உச்ச மின் தேவை நேரங்களில் கூடுதல் மின்சாரத்தைப் பெறுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அதிகபட்சமாக ரூ.30 வரை செலுத்தி வாங்க கேரள மின்சார வாரியத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த முறையில் இன்று முதல் கூடுதல் மின்சாரத்தைப் பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுவரை ஒரு யூனிட் மின்சாரத்திற்கு சுமார் ரூ.10 வரை செலுத்தி மின்சாரம் வாங்க மட்டுமே அனுமதி இருந்த நிலையில், தற்போது அந்த வரம்பு ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், NTPC-யின் ரத்னகிரி மின் நிலையத்தில் இருந்து சுமார் 300 மெகாவாட் மின்சாரத்தை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனுடன், ஒடிசாவில் உள்ள நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனிடமிருந்தும் மின்சாரம் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் வி.டி. சதீசன், மின்சாரத்துறை அமைச்சர் சன்னி ஜோசப், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் செயலாளர், வரித்துறை செயலாளர், மின்சாரத்துறை செயலாளர் மற்றும் முதல்வரின் சிறப்பு செயலாளர் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்