180 பேருக்கு ‘அண்ணா சிறப்பு பதக்கம்’! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய 180 அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு “தமிழக முதல்-அமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்” வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் அரசு பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அண்ணா சிறப்புப் பதக்கங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எந்தெந்த துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பதக்கம்?
இந்த ஆண்டு காவல்துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 பேருக்கு அண்ணா சிறப்புப் பதக்கம் வழங்கப்படுகிறது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 பேரும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 பேரும் இந்தப் பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 பேருக்கும், விரல்ரேகைப் பிரிவைச் சேர்ந்த 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தடய அறிவியல் துறையைச் சேர்ந்த 4 அலுவலர்களுக்கும் அண்ணா சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
இதன் மூலம் மொத்தம் 179 பேருக்கு அண்ணா சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
கடலில் சிக்கிய சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு ஓட்டுநர்
இதனிடையே, உயிரைப் பொருட்படுத்தாமல் கடலில் சிக்கிய சிறுவனை மீட்ட நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகருக்கு “தமிழக முதல்-அமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர் பதக்கம்” வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 19ஆம் தேதி நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகள் ராட்சத அலையில் சிக்கினர். இதில் 9 வயது சிறுமியை பொதுமக்கள் மீட்ட நிலையில், 9 வயது சிறுவன் சைலேஷ் கடலுக்குள் சுமார் 100 அடி தொலைவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது தனது இரவுப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தீயணைப்பு ஓட்டுநர் ராஜசேகர், சம்பவத்தை அறிந்தவுடன் உடனடியாக கடற்கரைக்கு விரைந்தார். அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையை பயன்படுத்தி கடலுக்குள் நீந்திச் சென்று சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
தனது உயிரைப் பற்றியும் பாதுகாப்பைப் பற்றியும் கவலைப்படாமல் மேற்கொண்ட இந்த துணிச்சலான செயலுக்காக அவருக்கு அண்ணா வீரதீர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. அவரது செயலுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகம், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்கனவே பாராட்டு தெரிவித்திருந்தனர்.
சிறப்பாக பணியாற்றியவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரித்து அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்தப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்ணா சிறப்புப் பதக்கங்கள் மற்றும் வீரதீர் பதக்கம் ஆகியவை தமிழக முதல்-அமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்