தமிழ்நாட்டில் ரூ.300 கோடி முதலீடு! 400 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு – லண்டனில் முக்கிய ஒப்பந்தம்!

லண்டன்: தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் புதிய திட்டத்தை செயல்படுத்த ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு இன்று (14.09.2026) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சாதன உற்பத்தி சார்ந்த தொழில் முதலீடு மேற்கொள்ளப்படுவதுடன், சுமார் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழும தொழில்நுட்ப இயக்குநர் ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோரும் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையை மேலும் விரிவுபடுத்தவும், சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கவும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.300 கோடி முதலீடு, அப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், நேரடியாக 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, IFS, வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.

Leave a Reply