தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமத்தின் அடுத்த முதலீடு? லண்டனில் முதல்வர் முன்னிலையில் முக்கிய பேச்சுவார்த்தை!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று (14.09.2026) அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா மற்றும் இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற ‘வெற்றி’ (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தீரஜ் ஹிந்துஜா விளக்கினார்.
மேலும், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் மேற்கொண்டு வரும் முதலீடுகளின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு, தங்களது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஹிந்துஜா குழுமம் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், அதிலும் காற்றாலை மின்சக்தித் துறையில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்வதில் ஹிந்துஜா குழுமம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. வாகன உற்பத்தித் துறைக்கான முக்கிய ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் பங்கை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, இங்கிலாந்திற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, இந்திய உயர் ஆணையகத்தின் Minister (Economic) நிதி மணி திரிபாதி, IAS மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழக வெற்றிக்குரல்