தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன: ஒரே நாளில் ₹12,300 கோடி – 9,400 வேலைவாய்ப்புகள்!
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில், ஒரே நாளில் சுமார் ₹12,300 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 9,400 வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் செப்டம்பர் 14, 2026 அன்று நடைபெற்ற முதலீட்டு தொடர்பான சந்திப்புகளில், பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் புதிய தொழில் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் சுமார் ₹11,000 கோடி முதலீடு செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, அசெம்பிளி மற்றும் தளவாடம் உள்ளிட்ட துறைகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளதுடன், சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் மாண்புமிகு முதலமைச்சரின் இங்கிலாந்து பயணத்தில், முக்கிய சந்திப்புகளின் விளைவாக, இன்று சுமார் 9,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரூ.12,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னணி நிறுவனங்களுடன் கையெழுத்தாகியுள்ளன.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 14, 2026
தவெக அரசின் ஊழலற்ற,…
மேலும், Ernst & Young (EY) நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre – GCC) அமைக்கப்பட உள்ளது. சுமார் ₹1,000 கோடி முதலீட்டில் 2,000-க்கும் மேற்பட்ட உயர்மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஸ்வீடனைச் சேர்ந்த Sigma Technology Group, தமிழ்நாட்டில் தனது உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்தும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் மின்மயமாக்கல், Embedded Systems மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் 600 உயர்திறன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Wilson Power Solutions நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சாதன உற்பத்தித் துறையில் சுமார் ₹300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.
முதலீடுகளை ஈர்ப்பதுடன், தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரித்து, தமிழ்நாட்டை புதிய தொழில்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுக்கான முக்கிய முதலீட்டு மையமாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் விஜய்யின் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக வெற்றிக்குரல்