“விஜய் சேதுபதியின் விமர்சனத்துக்கு பதில் சொல்ல தேவையில்லை” – அமைச்சர் சம்பத்குமார்!
கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி வ.உ.சி. மைதானம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் வே. சம்பத்குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்து வரும் கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சம்பத்குமார், “விஜய் சேதுபதியின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல தேவையில்லை. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கிறேன். பார்வையாளர்களை கவர்வதற்காக அவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை குறித்துப் பேசிய அமைச்சர், இந்த ஆண்டு விற்பனையில் ரூ.10 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பழைய சேலைகளை வழங்கி புதிய சேலைகளை வாங்கிக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கோயம்புத்தூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கைத்தறி ஆடைகள் மற்றும் சேலைகள் கிடைக்கும் நிலையில், கோவையிலும் விற்பனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக்குரல்