வேட்டி–சேலை திட்டம்: நெசவாளர்களுக்கு சேலை ஒன்றுக்கு ரூ.114.80 கூலி – அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு!
மதுரை: வேட்டி–சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி மற்றும் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெசவாளர்களின் கூலி உயர்வு, புதிய ரக சேலை உற்பத்தி, உபரி சேலைகளை கொள்முதல் செய்வது, வேலையில்லாத காலங்களில் நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி மற்றும் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் ஆலோசனை… pic.twitter.com/EDNLPgQIMa
— Jagadeshwari (@jagadeshwarioff) September 15, 2026
சேலைக்கான கூலி ரூ.114.80 ஆக உயர்வு
பொங்கல் 2026 திட்டம் வரை நெசவு செய்யப்பட்ட பெடல்தறி சேலைகளுக்கு சேலை ஒன்றுக்கு ரூ.103.95 கூலியாக வழங்கப்பட்டு வந்தது.
தற்போது பொங்கல் 2027 திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட உள்ள புதிய ரக பெடல்தறி சேலைகளுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட கூலியைவிட ரூ.10.85 கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இனி நெசவாளர்களுக்கு சேலை ஒன்றுக்கு ரூ.114.80 நெசவுக்கூலி வழங்கப்பட உள்ளது.
மேலும், நெசவுக்கூலி நிர்ணயக் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கூலி உயர்வு மற்றும் நெசவுத் தொழில் தொடர்பான பிற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபரி சேலைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை
சங்க உறுப்பினர்களிடம் கைவசம் இருப்பதாக கூறப்படும் உபரி சேலைகளை கொள்முதல் செய்வதற்காக கைத்தறி இயக்குநர் மூலம் நடவடிக்கை எடுக்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், வேலையில்லாத காலங்களில் நெசவுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சங்கங்களில் போதிய நிதி இல்லாத நிலை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தறி மாற்றச் செலவை சங்கமே ஏற்கும்
பொங்கல் 2027 திட்டத்திற்காக புதிய ரக சேலைகளை உற்பத்தி செய்ய, தறிகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்காக ஏற்படும் ரூ.5,000 வரையிலான செலவை சம்பந்தப்பட்ட நெசவாளர் சங்கமே ஏற்றுக்கொள்ளும் என ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்தார்.
நெசவாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக்குரல்