கிளாம்பாக்கத்தில் இணைப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வு!

சென்னை, செப். 15: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணைப்பு பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்து கொண்டிருக்கும் பயணிகளின் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகளின் இயக்கத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர், பயணிகளுக்கான பேருந்து வசதிகள் மற்றும் இயக்கம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களிடமும் பேருந்து சேவை, இயக்கம் மற்றும் ஏற்பாடுகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் அதிகளவிலான பயணிகள் சென்னை திரும்பும் சூழலில், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆய்வின்போது போக்குவரத்துத் துறை செயலாளர் இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் க. குணசேகரன் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply