கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்கள்!

கோவை: கோவை–பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் 250-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்பேட்டையில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவைகள் குறித்து அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிறு, குறு தொழில் துறை அமைச்சர் மதன்ராஜா மற்றும் அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, தொழிற்பேட்டையில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதற்கு முன்னதாக, தொழிற்பேட்டையின் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று நேரில் ஆய்வு செய்தனர். அமைச்சர் விக்னேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்ட, அமைச்சர் மதன்ராஜா பின்னால் அமர்ந்து சென்று சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை பார்வையிட்டார்.

10 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் இல்லை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதன்ராஜா, தொழிற்பேட்டையில் உள்ள அடிப்படை தேவைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்துள்ளதாக தெரிவித்தார்.

தொழில் நிறுவனங்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்துள்ளதாகவும், அவற்றை அடுத்தடுத்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மூலப்பொருட்கள் விலை உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

மூலப்பொருட்களின் விலை உயர்வு என்பது இந்திய அரசால் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும், அது உலகளாவிய காரணிகளால் ஏற்படும் மாற்றம் என்றும் அமைச்சர் மதன்ராஜா தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற போர் உள்ளிட்ட சர்வதேச சூழல்களாலும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், இந்த விலை உயர்வு நிலையானது அல்ல என்றும், எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படும் என நம்புவதாகவும் கூறினார்.

மேலும், நிலை கட்டணம் குறைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பெண் தொழில் முனைவோருக்கு 10 தொழிற்பேட்டைகள்

பெண் தொழில் முனைவோர் மற்றும் பெண் தொழிலாளர்களுக்காக 10 தொழிற்பேட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் முன்னேற்றம் அடைவதுடன், அவர்கள் செயல்படும் பகுதிகளில் உள்ள நிறுவனங்களும் வளர்ச்சி பெறும் என அவர் குறிப்பிட்டார்.

தங்க நகை தொழில் பூங்கா

தங்க நகை தொழில் பூங்கா கட்டுமானப் பணிகள் தொடர்பாக ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு ஆய்வு மேற்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.60 லட்சம் போதாது என தொழில்துறையினர் தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, இதுதொடர்பாக மீண்டும் திட்ட முன்மொழிவு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

“அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்வதை விட களத்திற்கே வருகிறோம்”

அமைச்சர் விக்னேஷ் பேசுகையில், இதற்கு முன்பு தொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் முதலில் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதிகாரிகள் தெரிவிப்பதை தொழில்துறையினரிடம் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால், தாங்கள் அடிப்படையில் இருந்து வந்தவர்கள் என்பதால், ஒவ்வொரு பிரச்சினையையும் களத்தில் நேரடியாக ஆய்வு செய்து அதன் உண்மை நிலையை அறிந்து கொள்வதாக தெரிவித்தார். அதனால்தான் இருசக்கர வாகனத்தில் சென்று தொழிற்பேட்டையை நேரில் ஆய்வு செய்ததாகவும் விளக்கம் அளித்தார்.

தவறு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை

மதுவிலக்கு துறையில் தவறு செய்ததாகக் கூறி சிலர் மீது இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் எந்தவித பாரபட்சமும் காட்டப்படாது என்றும் கூறினார்.

மேலும், குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கடைநிலை தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பதற்காக சிலர் வீடியோ எடுப்பதாக தொழிலாளர்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தனக்கு ஏதேனும் அழுத்தங்கள் வருகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நல்லது செய்யும்போது சிலர் அழுத்தம் கொடுக்கத்தான் செய்வார்கள் என்றும், அவர்கள் செய்ய வேண்டியதை செய்யட்டும்; அதை பார்த்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

முதல்வர் மீதான விமர்சனம் குறித்து கண்டனம்

திமுக ஆர்ப்பாட்டத்தின்போது சிலர் முதலமைச்சரை கடுமையாக விமர்சித்துப் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதனை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக பேசுவதற்கு கட்சியில் செய்தித் தொடர்பாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் இதுகுறித்து உரிய விளக்கங்களை வழங்குவார்கள் என்றும் கூறினார்.

மின்தடை குறித்து விளக்கம்

தொழிற்பேட்டையில் மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மதன்ராஜா, பராமரிப்புப் பணிகள் காரணமாக சில இடங்களில் தற்காலிக மின்தடை ஏற்படலாம் என்றும், பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மின்சார விநியோகம் சீராக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply