ரிப்போர்டர் டிவி அலுவலகத்தில் போலீஸ் சோதனை: “அவசரநிலையை நினைவூட்டும் அத்துமீறல்” – பினராயி விஜயன் கண்டனம்!
கொச்சி:
ரிப்போர்டர் டிவி தலைமை அலுவலகத்தின் நியூஸ் டெஸ்க்கிற்குள் போலீசார் நுழைந்து செய்தி ஒளிபரப்பைத் தடுத்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிகாலை கொச்சியில் உள்ள ரிப்போர்டர் டிவி நியூஸ் டெஸ்க்கிற்குள் போலீசார் குழுவாக நுழைந்து, அங்கு பணியாற்றிய ஊடகவியலாளர்களின் செல்போன்களை கைப்பற்றியதாகவும், சுமார் ஒன்றரை மணி நேரம் அச்சுறுத்தலான சூழல் நிலவியதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் ஊடகவியலாளர்களை வீடியோவிலும் பதிவு செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மெஸ்ஸியை கேரளாவுக்கு அழைத்துவரும் திட்டம் தொடர்பான நிதி முறைகேடு குறித்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையின் ஒரு பகுதியாக ரிப்போர்டர் டிவி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் நடவடிக்கை அவசரநிலை காலத்தை நினைவூட்டும் வகையில் இருப்பதாக பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். மேலும், ஊடக நிறுவனங்களில் நடைபெற்ற முந்தைய சோதனைகளுடன் இந்த நடவடிக்கையை ஒப்பிட்டு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் குரலை ஒடுக்க முயலும் இதுபோன்ற நடவடிக்கையை கேரள மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும், ஊடகங்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சரும் உள்துறை அமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்திற்கு எதிரானதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரிப்போர்டர் டிவி அலுவலக சோதனை தொடர்பாக பத்திரிகையாளர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக வெற்றிக்குரல்