மெஸ்ஸி வருகை விவகாரத்தில் திடீர் சோதனை! 5 இடங்களில் அதிகாலை முதல் எஸ்ஐடி அதிரடி!
மெஸ்ஸியை கேரளாவுக்கு அழைத்துவரும் திட்டத்தின் பெயரில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக, கேரளாவில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இன்று அதிகாலை 4 மணி முதல் மாநிலத்தின் 5 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
கொச்சியில் உள்ள அஸ்டின் சகோதரர்களின் வீடுகள், களமசேரியில் உள்ள ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் வயநாட்டில் உள்ள வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.
ஏடிஜிபி பி. விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த நடவடிக்கையில், மெஸ்ஸியின் கேரள வருகை தொடர்பான ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் முக்கியமான கடிதப் பரிமாற்றங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தேவையான ஆவணங்களை கைப்பற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மெஸ்ஸியை கேரளாவுக்கு அழைத்துவரும் திட்டத்தின் பெயரில் ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் நிறுவனம் ரூ.25.78 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக சிறப்பு விசாரணைக் குழு ஏற்கனவே கண்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தொடர்பான ஸ்பான்சர்ஷிப்புக்காக அதன் வசூல் முகவர் மூலம் ரூ.126.04 கோடி அனுப்பப்பட்டதாகவும், அதற்கு ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் அடிப்படையில் செலுத்த வேண்டிய ரூ.22.69 கோடி ஐஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு வெளிநாட்டு சட்ட மற்றும் மத்தியஸ்தக் கட்டணங்களுக்காக செலுத்தப்பட்ட ரூ.1.90 கோடிக்கு ரூ.34.15 லட்சம் வரி செலுத்தப்படவில்லை என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மெஸ்ஸியை கேரளாவுக்கு அழைத்துவரும் திட்டத்தின் ஸ்பான்சர்ஷிப் ஏற்பாடுகள் தொடர்பாக பணப்பரிவர்த்தனைகள் மற்றும் வரி ஏய்ப்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் எஸ்ஐடி சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் மேலும் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்