தடுப்பு சுவர் இடிந்து கிடக்கும் டேம் கால்வாய்: காவேரிப்பட்டிணம் சாலையில் தொடரும் அபாயம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே கொசமேடு முதல் சாப்பரம் செல்லும் சாலையில், மோட்டுப்பட்டி அடுத்துள்ள டேம் கால்வாய் பகுதியில் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பகுதியில் ஏற்கனவே அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருவதாகவும், தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதால் விபத்து அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தடுப்பு சுவர்களை உடனடியாக சீரமைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பல நாட்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பெரும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படுவதற்கு முன்பாக, டேம் கால்வாய் பகுதியில் இடிந்து விழுந்துள்ள தடுப்பு சுவர்களை உடனடியாக சீரமைத்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக வெற்றிக்குரல்