தனியார் பள்ளிகளிடம் பணம் பெற்று மோசடி? – மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை!

சென்னை – செப்டம்பர் 16: தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோருக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 177 தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளித் தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகங்களைச் சேர்ந்தவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் Federation of Associations of Private School in Tamil Nadu அமைப்பின் செயலாளர் இளங்கோவன் என்பவரிடம் பெறப்பட்ட புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் எதிரி B.T. அரசுகுமார், வயது 59, சாலிகிராமம், சென்னை என்பவரை கடந்த 27.06.2026 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தியதாகவும், பின்னர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கின் தொடர்ச்சியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர் தமிழகம் முழுவதும் விசாரணை மேற்கொண்டு, இதுவரை 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசு அலுவலகங்களைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின் அடிப்படையில் இதுவரை 177 பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் தொகை வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி செய்யப்பட்டதாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு வரும் நிலையில், நிதி மோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நபர்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றச்செயலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள் மற்றும் பிரதிநிதித்துவ ஆவணங்கள், நிதிப் பரிவர்த்தனை பதிவுகள், கைபேசிகள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆதாரங்கள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் விசாரணையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரின் பங்கு, நிதிப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள நான்கு இடங்களிலும், அவரது உதவியாளர் வானதி கார்த்திக் என்பவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள இரண்டு இடங்களிலும் இன்று 16.09.2026 காலை முதல் ஒரே நேரத்தில் சோதனைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களின் வங்கி கணக்குகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வங்கி கணக்குகள் மற்றும் ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனைகளின்போது கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் சோதனைகள் மற்றும் விசாரணைகள் மூலம், தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறப்பட்ட நடவடிக்கைகளின் பின்னணி என்ன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது விசாரணை நிலையில் உள்ள குற்றச்சாட்டுகளாகும். சோதனைகளில் கைப்பற்றப்படும் ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டுகளின் முழுமையான பின்னணி மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பங்கு குறித்து மேலும் விவரங்கள் வெளியாகும்.

Leave a Reply