தேனி அல்லிநகரத்தில் தெருநாய்கள் அட்டகாசம்: பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் அச்சம்.

தேனி:

தேனி அல்லிநகரம் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அல்லிநகரம் பகுதிகளில் சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தெருநாய்கள் கூட்டமாக துரத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போட வேண்டிய நிலை ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை தெருநாய்கள் துரத்துவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் சாலைகளில் செல்லும்போது தெருநாய்கள் துரத்துவதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தெருநாய்கள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெருநாய்களை முறையாக பிடித்து, அவற்றுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தேனி அல்லிநகரம் பகுதியிலும் இத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தெருநாய்கள் காரணமாக விபத்துகள் அல்லது பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply