விநாயகர் சதுர்த்தியில் நெகிழ வைத்த நலத்திட்ட உதவிகள்! மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள்… ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியில் உள்ள அரசமர விநாயகர் சதுர்த்தி விழாக்குழு அறக்கட்டளை சார்பில் 29-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழாக்குழு தலைவர் மோகன் தலைமை வகித்தார். விழாக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், சத்தியமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகரமன்றத் தலைவர் உமா சிவாஜிகணேசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், 3 ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் சாந்திபாபு, தொழிலதிபர் ஜெகன்பிரசாத், விழாக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழாக்குழு பொருளாளர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்குரல்