திருமுல்லைவாயில் தொகுதிகளில் இரவில் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருட்டு!
இரவில் வாகனங்களில் பெட்ரோல் திருடும் மர்மநபர்கள்!திருமுல்லைவாயலில் அச்சத்தை ஏற்படுத்திய தொடர் திருட்டு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
ஆவடி:
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மர்மநபர்கள் பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயல் திருவள்ளுவர் நகர் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வீடுகளின் முன்பாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால், காலையில் வேலைக்குச் செல்லும் வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததாக கூறப்படும் இரு மர்மநபர்கள் DIO இருசக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு, அவற்றில் இருந்து பெட்ரோலை திருடிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மர்மநபர்கள் எவ்வித அச்சமுமின்றி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்து, வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து பெட்ரோலை திருடிச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படும் இந்த பெட்ரோல் திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் திருமுல்லைவாயல் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்