சத்தியமங்கலத்தில் களைகட்டிய விநாயகர் சிலை ஊர்வலம்! 36-க்கும் மேற்பட்ட சிலைகள்… 300 போலீசார் பாதுகாப்பு!
சத்தியமங்கலம்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 36-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் டிராக்டர் மற்றும் மினி டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு விநாயகர் சிலைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அச்சுதான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ரங்கசமுத்திரம், புதிய பேருந்து நிலையம், ஆற்றுப்பாலம், சின்ன ரோடு, கோட்டுவீராம்பாளையம், கடைவீதி, மணிக்கூண்டு, சத்யா தியேட்டர், வரதம்பாளையம் மற்றும் வடக்குப்பேட்டை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
தொடர்ந்து அத்தாணி சாலை வழியாக பவானி ஆற்றை சென்றடைந்த விநாயகர் சிலைகள் அங்கு கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை கருத்தில் கொண்டு 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக்குரல்