ஒகேனக்கல்லில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்! 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள்… 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. நேற்று நிலவரத்துடன் ஒப்பிடும்போது இன்றும் நீர்வரத்து அதே அளவில் தொடர்கிறது.

இதனிடையே, நேற்று 16.09.2026 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் ஒகேனக்கல் மற்றும் நாகமரை பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் ஆற்றில் கரைக்கப்பட்டன.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டும் 600-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒகேனக்கல் பகுதிக்கு வந்து விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீராடி சென்றனர்.

அதேபோல் ஏரியூர் மற்றும் நாகமரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200 வாகனங்களில் 200 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று விநாயகர் சிலைகளை கரைத்து விழாவை கொண்டாடினர்.

பல பகுதிகளில் இருந்து சிலைகள் வருகை

பென்னாகரம், ஏரியூர், நாகமரை, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன.

ஒகேனக்கல் மற்றும் நாகமரை பகுதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று இரவு சுமார் 8 மணி வரை விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

பாதுகாப்பில் 200-க்கும் மேற்பட்டோர்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்காக 200-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி, சிலைகளை கரைப்பதற்காக வரும் ஒரு வாகனத்திற்கு 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கவும், ஆற்றில் பாதுகாப்பான முறையில் செல்லவும் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறை வாகனங்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தல்

ஒகேனக்கல் காவல் நிலையம் முன்பும், விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்ட முதலைப் பண்ணை அருகிலும் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

பொதுமக்கள் ஆற்றில் பாதுகாப்பாக செல்ல வேண்டும், காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

காவல்துறை, தீயணைப்புத் துறை, மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கையால் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பாக நடைபெற்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

நேற்று ஒகேனக்கல் மற்றும் நாகமரை பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் கூட்டத்தால் விழாக்கோலம் பூண்டது போல் காட்சியளித்தது.

Leave a Reply