‘ரீ இமாஜினிங் கேரளா’ மாநாடு: மாநில வளர்ச்சிக்கு புதிய திட்டவரைவு – அமைச்சர் கே. முரளீதரன்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற ‘ரீ இமாஜினிங் கேரளா’ (Re-Imagining Kerala) ரவுண்ட் டேபிள் மாநாடு, மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என்று சுகாதாரம் மற்றும் தேவஸ்வம் துறை அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை காலக்கெடுவுக்குள் திறம்பட செயல்படுத்துவதற்கான திட்டவரைவை உருவாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் லெமன் ட்ரீயில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே. முரளீதரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சுகாதாரம், சுற்றுலா, தொழில் குறித்து ஆலோசனை
மாநாட்டின் மூன்று நாட்களிலும் சுகாதாரம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையமாகக் கொண்டு ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள், முதலீடுகளை அதிகரிப்பது, புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவது மற்றும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கேரளா தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலம் அல்ல என்ற தவறான கருத்து தற்போது மாறி வருவதாக அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்தார்.
மாநிலத்தில் முதலீடு செய்ய பல தொழில் நிறுவனங்கள் முன்வருவதாகவும், தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கும் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி
கேரளாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியே அரசின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்ட அமைச்சர், சுகாதாரத் துறையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையிலும் அதிக அளவில் முதலீடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.
சுற்றுலா என்பது பல்வேறு வாய்ப்புகள் நிறைந்த துறையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா வளர்ச்சிக்கான பல்வேறு இடங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ளதால், அவற்றின் வளர்ச்சி வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘ரீ இமாஜினிங் கேரளா’ மாநாட்டின் மூலம் மாநிலத்தின் மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்தார்.
முதலீட்டாளர்களின் விண்ணப்பங்களுக்கு விரைவான முடிவு
நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவு மற்றும் கலால் துறை அமைச்சர் எம். லிஜு, இந்தியாவில் வலுவான கூட்டுறவு பொருளாதார அமைப்புகளில் ஒன்றாக கேரளா விளங்குவதாக தெரிவித்தார்.
மேலும், கேரளா தற்போது முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முதலீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது தேவையற்ற காலதாமதம் இல்லாமல் முடிவெடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கேரளாவின் பொருளாதாரத்தில் கூட்டுறவுத் துறையின் பங்களிப்பை 10 சதவீதமாக உயர்த்துவது அரசின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் பங்கேற்பு
‘ரீ இமாஜினிங் கேரளா’ மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஷர்மிளா மேரி ஜோசப், தொழில்துறை இயக்குநர் ஸ்னேஹில் குமார் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இது அடித்தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக்குரல்