தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடக்கம் – யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்.
சென்னை, செப்.18:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், இத்திட்டத்தை தொடங்குவது மற்றும் செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், திட்டம் தொடங்கப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்
தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில் இடம்பெறும் தாய்மாமன் சீர்மரபை பிரதிபலிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை சிறப்பிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை கடந்த ஜூன் 23-ம் தேதி வெளியிடப்பட்டது.
செப்டம்பர் 28 முதல் விநியோகம்
திட்டம் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட்ட பின்னர், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நேரத்தில் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஜூன் 22 முதல் திட்டம் தொடங்கப்படும் நாள் வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக 107 மையங்களில் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
1.28 லட்சம் மோதிரங்கள் முதல் கட்டமாக கொள்முதல்
தங்க மோதிரங்களுக்கு தனித்துவமான வரிசை எண் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான சேதப்படுத்த முடியாத பேக்கேஜிங்கிலும் அவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக முதல் கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் திட்டப் பயன்?
தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கர்ப்பிணிகள் PICME பதிவில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் நோக்கம் என்ன?
அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்வதை ஊக்குவிப்பதுடன், தாய் மற்றும் சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவ சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிப்பதுடன், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் திட்டமாகவும் இது அமையும் என அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்