ஆன்லைன் ஷாப்பிங் பெயரில் போலி பரிசு கடிதம்: ஸ்கிராட்ச் கார்டு மூலம் பணம் பறிக்கும் கும்பல் – போலீஸ் எச்சரிக்கை.
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி, பதிவு தபால் மூலம் போலி பரிசு கடிதங்களை அனுப்பி பணம் பறிக்கும் சைபர் மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்கிராட்ச் கார்டில் பல லட்சம் பரிசு என மோசடி
பொதுமக்களின் வீடுகளுக்கு வரும் கடிதங்களில் கவர்ச்சிகரமான ஸ்கிராட்ச் கார்டுகள் இடம்பெற்றிருக்கும். அந்த கார்டை ஸ்கிராட்ச் செய்ததும், பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
பரிசுத் தொகையை பெறுவதற்காக கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைன் எண் அல்லது வாட்ஸ்அப் எண்ணை தொடர்புகொள்ளுமாறு மோசடி கும்பல் அறிவுறுத்துகிறது.
வரி, செயலாக்கக் கட்டணம் என பணம் வசூல்
அந்த எண்ணை தொடர்புகொள்ளும் நபர்களிடம், தங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் மோசடி நபர்கள் பேசுகின்றனர்.
பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு முன்பாக, Processing Fee, Documentation Charge, Income Tax உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
போலி ஆவணங்களையும் அனுப்பி நம்ப வைக்கும் முயற்சி
பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க, போலியாக தயாரிக்கப்பட்ட வருமான வரி ஆவணங்கள், அதிகாரப்பூர்வ முத்திரைகள் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி நம்ப வைக்கவும் மோசடி கும்பல் முயற்சிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வழங்கும் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிய பிறகு, மோசடி நபர்களை மீண்டும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
முன்பணம் கேட்டால் எச்சரிக்கை
ஸ்கிராட்ச் கார்டு, பரிசு அல்லது கிப்ட் ஆஃபர் கிடைத்துள்ளதாக கூறி, அதனைப் பெறுவதற்கு முன்பாக பணம் செலுத்த வேண்டும் எனக் கேட்பது மோசடியின் முக்கிய அறிகுறி என போலீசார் எச்சரித்துள்ளனர்.
அறிமுகமில்லாத தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொள்வதையும், வாட்ஸ்அப் மூலம் வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பகிர்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மோசடியில் பணத்தை இழந்தால் 1930-க்கு உடனடியாக தகவல்
இத்தகைய சைபர் பொருளாதார மோசடியில் யாரேனும் சிக்கி பணத்தை இழந்தால், தாமதிக்காமல் 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும்.
மேலும், தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளமான www.cybercrime.gov.in வழியாகவும் புகார் பதிவு செய்யலாம்.
பரிசு கிடைத்ததாக வரும் கடிதங்கள், ஸ்கிராட்ச் கார்டுகள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் போலி ஆவணங்களை நம்பாமல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகள் மூலம் தகவலை சரிபார்ப்பது பாதுகாப்பானது.
தமிழக வெற்றிக்குரல்