ஓசூர் அரசு மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சைகள் விரைவில் – அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!
ஓசூர், ஆகஸ்ட் 29:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செயல்பட்டு வரும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்ற அமைச்சர், அங்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் நேரடியாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து மருத்துவமனையின் கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர், மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்தை தொடர்ந்து முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்நுட்பப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
36 மருத்துவர்கள் – 125 செவிலியர்கள்
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஓசூர் மாவட்ட தலைமை மருத்துவமனை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், 500 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மாதத்திற்கு சுமார் 350 பிரசவங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்கும் வகையில், தற்போது 27 மருத்துவர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் 36 மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல், செவிலியர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 125 செவிலியர் பணியிடங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களுக்கான CRRI பயிற்சியும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓசூர் மருத்துவமனையில் தற்போது 30 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
ஓசூரில் உயர் சிறப்பு சிகிச்சை
ஓசூர் அரசு மருத்துவமனையில் கார்டியாலஜி, ரேடியாலஜி, நெப்ராலஜி, நியூரோ சர்ஜரி உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ சேவைகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மாவட்டம் முழுவதும் உயர் சிறப்பு மருத்துவ சேவைகள் கிடைக்கும் வகையில் Hub and Spoke முறையில் டெலிமெடிசின் சேவை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான கேத் லேப் (Cath Lab) வசதி ஏற்படுத்தப்படும் என்றும், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பழைய வளாகத்தில் உள்ள CT ஸ்கேன் புதிய மருத்துவமனைக்கு மாற்றம்
ஓசூர் அரசு மருத்துவமனையின் பழைய வளாகத்தில் செயல்பட்டு வரும் CT ஸ்கேன் வசதி விரைவில் புதிய மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனைக்கு பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் பேருந்து நிறுத்தம் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
24 மணி நேரமும் செயல்பட வேண்டும்
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை என்பதால் அது 24 மணி நேரமும் முழுமையாக செயல்பட வேண்டும் என்றும், மருத்துவமனையின் பிரதான வாயில் உள்ளிட்ட பகுதிகள் தேவையின்றி பூட்டப்பட்டிருப்பது போன்ற பிரச்சினைகள் இனி இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மருத்துவமனையை புதிதாக கட்டி முடித்திருப்பதைப் போலவே தொடர்ந்து சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும், சிறு சிறு குறைபாடுகள் கூட பின்னர் பெரிய பிரச்சினைகளாக மாறாத வகையில் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நோயாளிகளுக்கான ‘நலம்’ AI சாட்பாட்
மருத்துவமனைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க பொதுமக்கள் ‘நலம்’ AI சாட்பாட் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், எதிர்காலத்தில் மருத்துவமனைகளில் ஆன்லைன் அப்பாயிண்ட்மென்ட் வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் நோயாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகள் பொதுமக்களின் மருத்துவ சேவைக்கான முக்கியமான இடம் என்பதால் அதன் பராமரிப்பில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக்குரல்