தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்றம்!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி 300-க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் பங்கேற்பு.

மயிலாடுதுறை – செப்டம்பர் 19: சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட தரங்கம்பாடி கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்கரை தூய்மைப் பணி, கையெழுத்து இயக்கம், மரக்கன்று நடுதல் மற்றும் கடற்கரை தூய்மை உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தரங்கம்பாடி கடற்கரை தூய்மைப் பணியை மயிலாடுதுறை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆர். சங்கர் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர், டெல்லி சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக அலுவலர் கௌரவ் குப்தா, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க மாவட்ட அலுவலர் ப்ரீதா, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க தலைவர் மதிவாணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி வட்டாட்சியர், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், கல்லூரி மாணவர்கள், லயன்ஸ் சங்கத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தரங்கம்பாடி கடற்கரையில் தேங்கியிருந்த சுமார் 750 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து கடற்கரை பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், கடற்கரையை தூய்மையாகப் பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பங்கேற்றவர்கள் கடற்கரை தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கடற்கரைப் பகுதிகளில் குப்பைகளை வீசாமல், கடல் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply