பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களிடையே தகராறு: தலைமை ஆசிரியை தாக்கப்பட்டதாக புகார் – 2 பேர் கைது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெளியனூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பொறுப்பு தலைமை ஆசிரியையை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த பரிமளா (55) என்பவர் வெளியனூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த அன்பு தனசேகரி என்பவர் 5-ம் வகுப்பு தமிழ் ஆசிரியையாக இப்பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார்.
ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடு
பரிமளா மற்றும் அன்பு தனசேகரி ஆகிய இருவரும் ஏற்கனவே சின்ன நெற்குணம் அரசு பள்ளியில் ஒன்றாக பணியாற்றியபோது கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வெளியனூர் பள்ளியிலும் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று காலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கு வந்த கணவர், மகன்
தகராறு ஏற்பட்டபோது, தமிழ் ஆசிரியை அன்பு தனசேகரி தனது கணவர் வேலு மற்றும் மகன் திரிஷாந்த் ஆகியோரை பள்ளிக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. பள்ளிக்கு வந்த இருவரும் தலைமை ஆசிரியை அறையில் இருந்த பரிமளாவை தரக்குறைவாக பேசி தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பள்ளியில் பணியாற்றும் மற்றொரு ஆசிரியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை – 2 பேர் கைது
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று வேலு மற்றும் திரிஷாந்த் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும், பரிமளா அளித்த புகாரின் பேரிலும் தமிழ் ஆசிரியை அன்பு தனசேகரி, அவரது கணவர் வேலு, மகன் திரிஷாந்த் ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து வேலு மற்றும் திரிஷாந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக மயிலம் வட்டாரக் கல்வி அலுவலர் மதன்குமாரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட தமிழ் ஆசிரியை அன்பு தனசேகரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர்கள் தொடர்புடைய தகராறு மற்றும் தாக்குதல் புகார் எழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்