வாணியம்பாடியில் பட்டப்பகலில் முதியவரிடம் கைவரிசை: அரிசி வாங்குவது போல் நடித்து 4 கிராம் தங்க மோதிரம் திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மக்கள் அதிகம் நடமாடும் காதர்பேட்டை பகுதியில், அரிசி கடை நடத்தி வரும் 73 வயது முதியவரிடம் மர்ம நபர் ஒருவர் தங்க மோதிரத்தை நைசாக கழற்றி எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (73), வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் உள்ள சி.என்.ஏ சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார்.

அரிசி வாங்குவது போல் நடித்து திருட்டு

இன்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் கண்ணனின் கடைக்கு வந்துள்ளார்.

அவர் அரிசி மூட்டைகள் வாங்குவது போல் கண்ணனிடம் பேசியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், கண்ணன் அணிந்திருந்த 4 கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தை அவருக்குத் தெரியாமல் நைசாக கழற்றி எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.

பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்

சம்பவம் குறித்து கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, தங்க மோதிரத்தை எடுத்துச் சென்ற மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பட்டப்பகலில் முதியவரிடம் தங்க மோதிரம் திருடப்பட்ட சம்பவம் காதர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply