ஏழிமலை கடற்படை அகாடமியில் பாதுகாப்பு அதிர்ச்சி: போலி ஆவணங்களுடன் பணியாற்றிய வங்கதேச நபர் கைது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஏழிமலை இந்திய கடற்படை அகாடமியில் போலி ஆவணங்களுடன் பணியாற்றி வந்ததாகக் கூறப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி இந்திய குடிமகன் எனக் காட்டிக் கொண்டதாகக் கூறப்படும் அந்த நபர், பிப்லப் சோரன் (32) என்ற பெயரில் ஆவணங்களை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி போலீஸ் சான்றிதழும் தாக்கல்
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் காவல்துறை பெயரில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலி போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழையும் அந்த நபர் சமர்ப்பித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் கடந்த ஒரு ஆண்டாக ஏழிமலை கடற்படை அகாடமியின் சலவைப் பிரிவில் (Laundry Section) பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
சந்தேகத்தை ஏற்படுத்திய நடவடிக்கைகள்
அந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடற்படை அகாடமி அதிகாரிகள் அவரை கண்காணிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடற்படை அதிகாரிகள் அவரிடம் விரிவான விசாரணை மேற்கொண்டனர். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, வங்கதேச குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் பையன்னூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தொடர்ந்து விசாரணை
போலி ஆவணங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன, அவற்றை பயன்படுத்தி கடற்படை அகாடமியில் வேலை பெறுவதற்கு யார் உதவினர், அவர் இந்தியாவுக்கு எப்போது வந்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த கடற்படை நிறுவனத்தில் போலி அடையாள ஆவணங்களுடன் ஒருவர் சுமார் ஓராண்டு பணியாற்றியதாக வெளியாகியுள்ள தகவல், பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்