மாணவர் அரசியலுக்கு கட்டுப்பாடா? கேரள பல்கலைக்கழகத்தின் வரைவு நெறிமுறைகளால் சர்ச்சை!
கேரள பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர் அரசியல் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படும் வரைவு நெறிமுறைகள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த வரைவு நெறிமுறைகளில் அரசியல் போராட்டங்கள், தர்ணா, முற்றுகைப் போராட்டங்கள், அரசியல் முழக்கங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. மேலும், அரசியல் கொடிகள், சுவரொட்டிகள், உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள், நிதி திரட்டுதல் மற்றும் இணையவழி அரசியல் பிரசாரங்களுக்கும் கட்டுப்பாடுகள் முன்மொழியப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கு இடதுசாரி மற்றும் வலதுசாரி மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாணவர் அரசியலை கட்டுப்படுத்தும் முயற்சி என எதிர்க்கட்சித் தரப்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே, கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் மோகனன் குன்னும்மல், சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆவணம் பல்கலைக்கழகத்தின் இறுதி நெறிமுறை அல்ல என்றும், எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், மாணவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு புதிய நெறிமுறைகள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போது வெளியாகியுள்ள ஆவணத்தை இறுதி நடைமுறையாக கருத முடியாது. மாணவர் அரசியல் தொடர்பான புதிய நெறிமுறைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னரே தெளிவாகும்.
தமிழக வெற்றிக்குரல்