ஓசூரில் 4 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்: 5,000-க்கும் மேற்பட்டோர் பயனடைய வாய்ப்பு!

ஓசூர், ஆக. 29:

கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஓசூரில் 4 முக்கிய வழித்தடங்களில் நீட்டிக்கப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்து சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.

ஓசூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் மற்றும் தொழில்துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா ஆகியோர் புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் C. தினேஷ்குமார், தமிழக வெற்றி கழக எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் புதிய பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் கீர்த்தனா பயணச்சீட்டுக்கான கட்டணத்தை செலுத்தி நடத்துனரிடம் இருந்து சீட்டு பெற்றுக்கொண்டார்.

7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த பேருந்து சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வழித்தட மாற்றங்கள் மூலம் சுமார் 7 கிராமங்களைச் சேர்ந்த 5,009-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வழித்தடங்களில் மாற்றம்

பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு 4 பேருந்து சேவைகளில் வழித்தட நீட்டிப்பு மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி – வேப்பனப்பள்ளி:
ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த இந்த பேருந்து சேவை தற்போது சின்னதம்மாண்டரப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டை – சொரகுறுக்கி:
இந்த பேருந்து சேவை கரகூர் கிராமத்தின் உள்பகுதி வழியாகச் சென்று வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெரியகுத்தி – சூளகிரி:
இந்த வழித்தட பேருந்து இனி B. சிங்கிரிப்பள்ளி பகுதிக்குள் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓசூர் – பெட்டப்பள்ளி:
இந்த பேருந்து சேவை தற்போது நாகசந்திரம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதி

புதிய வழித்தடங்கள் மூலம் கிராமப்புறங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும், வேலை மற்றும் அன்றாட தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கும் போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் க. ராஜராஜன், துணை மேலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply