கொச்சி நீச்சல் குளத்தில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு: குடியிருப்பு நிர்வாகத்தில் பாதுகாப்பு குறைபாடா?
கொச்சி கலூர் ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானம் அருகே உள்ள கென்ட் ஹெயில் கார்டன் குடியிருப்பின் நீச்சல் குளத்தில் 6 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணையின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் கே.கே. ஷாஜு தலைமையிலான குழுவினர் குடியிருப்புக்கு நேரில் சென்று நீச்சல் குளம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் குழந்தைகள் நெருக்கமாக விளையாடும் பகுதிக்கு அருகிலேயே போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் நீச்சல் குளம் பராமரிக்கப்பட்டதாக ஆணையம் முதற்கட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிர குறைபாடுகள் மற்றும் அலட்சியம் இருந்திருக்கலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆய்வுக் குழுவில் குழந்தைகள் நலக் குழுத் தலைவர் உல்லாஸ் மது, உறுப்பினர் ஜின்சிமோள் குரியன், எர்ணாகுளம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ஜெயந்தி பி. நாயர், எர்ணாகுளம் டவுன் நார்த் காவல் நிலைய எஸ்.எச்.ஓ. மனோஜ் எம். உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக விரிவான மற்றும் திறமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த மரணம் வெறும் விபத்து என மட்டுமே கருதுவது, குடியிருப்புகளில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கேள்விகளை புறக்கணிக்கும் நிலையை உருவாக்கக்கூடும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலத்தின் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளில் இதுபோன்ற பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக ஆணையம் கூறியுள்ளது. எதிர்பாராத விபத்துகளை முன்கூட்டியே கருத்தில் கொண்டு, குடியிருப்புகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டாயம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரையும் ஆணையக் குழுவினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். குடும்பத்தினரிடம் புகார் மற்றும் சம்பவம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்ததுடன், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
மேலும், குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் தேவையான உளவியல் மற்றும் சமூக ஆதரவு (Psycho-social intervention) வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக புகார்தாரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ விசாரணைக் கூட்டத்தை நடத்தவும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழக வெற்றிக்குரல்