64 நாட்களுக்கு பிறகு பழனி ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்: பராமரிப்பு பணிகள் நிறைவு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை, 64 நாட்களுக்கு பிறகு சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் தொடங்கியது.

பழனி மலைக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

64 நாட்கள் நடைபெற்ற பராமரிப்பு பணிகள்

ரோப்கார் சேவையில் தினசரி ஒரு மணி நேரம், மாதத்திற்கு ஒரு நாள் மற்றும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, ஜார்கண்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான புதிய கம்பிவடம் ரோப்காரில் பொருத்தப்பட்டது.

மேலும், மேல் தளத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் சாப்டுகள் மாற்றப்பட்டதுடன், ரோப்கார் பெட்டிகளிலும் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக வர்ணம் பூசப்பட்டது.

ஐஐடி நிபுணர் குழு ஆய்வு

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதற்கட்டமாக எடை கற்கள் வைக்கப்பட்டு ரோப்கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஐஐடி நிபுணர் குழுவினர் ரோப்கார் சேவையை ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பிறகு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ரோப்கார் சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, ரோப்கார் வளாகத்தில் புதிய டைல்ஸ் கற்கள் பதித்தல், பால் சீலிங், வண்ண விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அழகுபடுத்தும் மற்றும் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சேவை தொடக்கம்

பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 64 நாட்களுக்கு பிறகு ரோப்கார் சேவை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக ரோப்கார் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கோவில் அதிகாரிகள், உபயதாரர்கள், கோவில் இணை ஆணையர் பொறுப்பு வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக வெற்றி கழகத்தின் பழனி நகரச் செயலாளர் மீதுன் நாகராஜும் நிகழ்வில் பங்கேற்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழனி மலைக்கோவிலின் ரோப்கார் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply