காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஜோசப் விஜய்!

சென்னை – செப்டம்பர் 22: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரும் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (22.09.2026) சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியருடன் முதலமைச்சர் உணவருந்தினார்.

பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், அவர்கள் பசியின்றிப் பள்ளியில் பயில்வதை உறுதி செய்யவும், கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தும் சூழலை உருவாக்கவும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம் தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் திட்டத்தைத் தொடங்கி வைத்த திருவான்மியூர் காந்திகிராமம் சென்னை நடுநிலைப் பள்ளியில் ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 199 மாணவ, மாணவியர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வந்தனர். தற்போது திட்ட விரிவாக்கத்தின் மூலம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மேலும் 127 மாணவ, மாணவியர் பயன்பெற உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்ட விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 7,537 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற உள்ளனர். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.217 கோடியே 63 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கத்துக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 34.64 லட்சம் மாணவ, மாணவியர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். இத்திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக ரூ.724 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் காலை உணவு வழங்கும். இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் வாயிலாக உணவு தயாரித்து வழங்கப்படும்.

அதேபோல், ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் சுயஉதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு அந்தந்தப் பள்ளிகளிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்பட உள்ளது.

மாணவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை மற்றும் கற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தவும், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ந. ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதல் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா. குமார், சட்டமன்ற உறுப்பினர் கே.வி. விஜய் தாழ உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கனகதீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ம. பல்லவி பஸ்தேவ், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மரு. ஜி.எஸ். சமீரன், இணை ஆணையர் (கல்வி) க. கற்பகம், சமூக நலத்துறை இயக்குநர் டாக்டர் ஜா. பிருந்தா தேவி, தெற்கு வட்டார துணை ஆணையர் அப்தாப் ரசூல் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply