ஆசிய விளையாட்டில் வெண்கலம்: தமிழ்நாட்டு பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.
சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியானது.
இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹரிஹரன் அம்சகருணனன் இடம்பெற்றிருந்தார். அரையிறுதிப் போட்டியின் முக்கியமான இரட்டையர் ஆட்டத்தில் எம்.ஆர். அர்ஜுனுடன் இணைந்து ஹரிஹரன் களமிறங்கினார். சீனாவின் ஹீ ஜி டிங்–லியு யி ஜோடியை எதிர்கொண்ட இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி போராடிய நிலையில், 21–16, 17–21, 21–9 என்ற கணக்கில் சீன ஜோடி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஹரிஹரனின் சாதனையை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘Sports Person Scheme’ திட்டத்தின் கீழ் ஹரிஹரன் நிதியுதவி பெற்று வருவதாகவும் முதலமைச்சர் அலுவலகப் பதிவு குறிப்பிட்டுள்ளது.
ஹரிஹரனின் இந்த சாதனை தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹரிஹரன் தொடர்ந்து பல்வேறு உயரங்களைத் தொட வேண்டும் என வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக்குரல்