தமிழகத்தில் 8 இடங்களில் புதிய குடியிருப்புகள்: விருப்பம் உள்ளவர்கள் கேட்பினை பதிவு செய்யலாம்.
சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் சுயநிதித் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2026-2027ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் குடியிருப்புகள்?
இதன்படி, சென்னை மாவட்டத்தில் அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம், எர்ணாவூர், கடலூர் மாவட்டத்தில் குண்டுசாலை, மதுரை மாவட்டத்தில் எல்வீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசை, கன்னியாகுமரி மாவட்டத்தில் வல்லன் குமாரவில்லை ஆகிய 8 இடங்களில் புதிய குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
குடியிருப்பு திட்டங்களை தொடங்குவதற்கு முன்பு, அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் உண்மையான தேவையை அறியும் வகையில் Demand Assessment மேற்கொள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இணையதளத்தில் விருப்பத்தை பதிவு செய்யலாம்
இதற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரத்யேக போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்தப் போர்டல் மூலம் தங்களுக்கு விருப்பமான இடம், குடியிருப்பு வகை மற்றும் பிற தேவைகள் தொடர்பான விவரங்களை பதிவு செய்யலாம்.
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவு பொதுமக்களின் குடியிருப்பு தேவையை மதிப்பீடு செய்வதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் தனிநபருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் எந்தவித முன்னுரிமையும் வழங்கப்படாது என வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.
திட்டம் செயல்படுத்தப்படும்போது SMS மூலம் தகவல்
தேவைக் கணக்கெடுப்பில் தங்களது விவரங்களை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளவர்களுக்கு, சம்பந்தப்பட்ட குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படும் போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் தேதி குறித்த தகவல் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
எனவே, மேற்கண்ட 8 பகுதிகளில் குடியிருப்புகளைப் பெற ஆர்வமுள்ள பொதுமக்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://tnhb.tn.gov.in) தங்களது தேவையை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம்:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் – TNHB
தமிழக வெற்றிக்குரல்