ஊத்தங்கரையில் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்: குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க வலியுறுத்தல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழுத் தலைவர் எத்திராஜி தலைமை வகித்தார். இதில் மாநிலச் செயலாளர் முத்து, மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செயலாளர் செல்வராசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், வட்டச் செயலாளர் சபாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வேலு, உஷா, சரவணன், கல்பனா, வெங்கடாசலம், கிருஷ்ணன், துரைசாமி, சுப்பிரமணியராஜா, பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்க கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில், மழைப்பொழிவு குறைந்துள்ள சூழலில் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம் என்பதால், அரசு நிர்வாகம் இதற்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஊத்தங்கரை வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், குடிநீர் பிரச்சினை ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
VB-G RAM (G) பணிகளை தொடங்க வலியுறுத்தல்
மேலும், ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் VB-G RAM (G) திட்டம் முறையாக நடைமுறைக்கு வந்திருந்தும், இதுவரை பணிகள் தொடங்கப்படாத கிராமங்களில் உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் கண்டன உரையாற்றியதுடன், பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்